Tuesday, 28 June 2016

பெருஞ்சுழி 11

சகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன.
மாவலியத்தை கட்டுவதொன்றே கடனென உழைத்தனர் மக்கள். தீருந்தோறும் மேலு‌ம் உறிஞ்சவே விழைவேறும் என்பதைப் போல வலுவிழந்தவர்களை மென்று உமிழ்ந்தது மாவலியம். மாவலியர் இருக்கும் போதே இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தார். அமைச்சர்களும் அணுக்கர்களும் மனைவிகளுமன்றி மாவலியரை கண்டவர் கிடையாது. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு கருவும் அப்பெயர் கேட்டு திகைத்தது. சோர்ந்தது. தான் பிறந்ததின் நோக்கம் தான் உருவாவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென அறிந்து அரற்றியது. அவர்களின் கதைகளிலும் கனவுகளிலும் மாவலியரே நிறைந்தார். கனவில் ஒவ்வொரு பெண்ணும் நூறு முறை அவரைப் புணர்ந்தாள். ஒவ்வொரு வீரனும் ஆயிரம் முறை அவரைக் கொன்றான். ஒவ்வொரு மதியாளனும் கோடி முறை அவரை வென்றான்.
சிற்றூர்களுக்கு செம்மண்ணிலும் நகரத் தெருக்களுக்கும் பெரும்  பாதைகளுக்கும் கருங்கல்லிலும் சாலைகள்  அமைக்கப்பட்டன. நாளும்  வளர்ந்தது மாவலியம். நிர்வாக முறைகள் இறுகின. அழுதும் அரற்றியும் உயிர்விட்டனர் மக்கள். உழைத்து வலி தாளாமல் உயிர்விடுவதே ஒரு சடங்கென்றானது சில மலைக்குடிகளில்.தண்டனை  என ஒரு விழி தோண்டி எடுக்கப்பட்ட இளைஞன் தன் இறப்புக்கு விறகுகள் அடுக்கி  எரிபடுக்கை அமைத்துக்  கொண்டிருந்தான். அவன் இடக்கண் இருந்த குழியில்  குருதி வழிந்து கொண்டிருந்தது. இலுப்பை  ஊற்றி எரிபடுக்கை அவனுக்கென ஒளிர்ந்து காத்திருந்தது. எரி புகுந்த பின் எழுந்து விடக்கூடாது  என்பதற்காக  தன் கால்களை  கட்டிக்  கொண்டான். ஊர் மூத்தோர்  இருவர் அவன்  கைகளைக் கட்டினர். இல்லாத இடவிழியில் சீழுடன் குருதியும்  வல விழியில்  நீரும்  வழிந்தன. பெண்கள்  ஆடைத் தலைப்பால் வாய் பொத்தி அழுதனர். குழந்தைகள்  ஆவலுடன்  வெறித்திருந்தன. மூத்தோர்  குற்றவுணர்வுடன் குனிந்து அமர்ந்திருந்தனர். மக்களை நோக்கித் திரும்பினான்  ஒருவிழி அற்றவன். கை கூப்பி அழுது கொண்டிருந்தவனின் பின்னே இலுப்பையில் எரி எழும் ஓசை கேட்டது. சொடுக்கி நிமிர்ந்தான்  அவன்.
"என் இனமே! விரைக! வடக்கில்  எழுகிறான் நம் ஆதவன். அத்திசை நோக்கி விரைக! சுனதா! என்  இறையே!" என கட்டியிருந்த கால்களுடன்  உந்தி எரி புகுந்தான்  அவன். நெருப்பில்  அவன் அவிந்த ஓசையுடன்  உள்ளிழுத்த மூச்சின் ஒளி ஒன்றிணைய மொத்தமும்  சொல்லவிந்து அமர்ந்திருந்தனர் அக்குடியினர்.
எழுந்தாள் ஒரு மூத்தவள். "எழுக! அஞ்சிக் குறுகி மிதிபட்டு இறப்பதனினும் எழுந்து நடந்து தலையறுபட்டு இறப்பது  மேல். எழுக!" என்றாள். அன்றிலிருந்து  வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினர் மக்கள். சுனதனும்  கதைகளாய்  மக்களிடம்  வந்து கொண்டிருந்தான். நூற்றுக்கு ஒருவர்  கூட வடக்கே விரிந்திருந்த பெரும்  பாலையை கடக்க முடியவில்லை. பாலையிலேயே மடிந்தனர் பலர். முன்பு  இறந்தவர்களின்  உடல் மிச்சங்களை உண்டு எஞ்சியவர்கள்  நகர்ந்தனர். வடக்கு  நோக்கி நகர்பவர்களின் எண்ணிக்கை  பெருகவே மாவவியத்தின் படைகள்  வடக்கில்  எழுந்தன. குடும்பத்துடன் வடக்கை கடப்பவர்களை யானைக் கொட்டடிக்கு கொண்டு சென்று குழந்தைகளை ஒரு கூண்டில் அடைத்து மூத்தவர்களை களிறுகளின் காலுக்கு கீழே கிடத்தினர். தனக்கு  முலையூட்டியவளும் தோளில் சுமந்தவனும் குருதிச் சேறாகி சுழித்துக் கிடப்பதைக் கண்டன குழந்தைகள். பித்தேறி இறந்தன. வெறிபிடித்து அடித்துக் கொண்டன. ஓடிச் சென்று களிறுகளின் காலுக்கு கீழே  தலை வைத்தன. ஒருவன் மட்டும் "வடக்கு " என்ற வார்த்தை மட்டும் உதட்டில் ஒட்டியிருக்க எவர்தொடாமேட்டினை அடைந்தான். களிற்றின்  மேல்  நின்றிருந்த சுனதனைக் கண்டான். "என் இறையே" என தலைக்கு  மேல்  கை கூப்பி ஓடி வந்தவன் களிற்றின்  கால்களில்  ஆங்காரத்துடன் மோதி மண்டை  பிளந்து இறந்தான். துடித்திறங்கிய சுனதன் மெல்லத் தளர்ந்து அவனை அள்ளித் தூக்கி சிதையமைத்து எரித்தான்.
வானத்தை  வெறித்தவாறு படுத்திருந்தான் சுனதன். மாசறியான் "புறப்பட உளம் கொண்டுவிட்டாயா? ” என்று கேட்டபடியே களிற்றின் மேல் படுத்திருந்த சுனதன் அருகே வந்தார்.
"ஆம் தந்தையே" என எழுந்தமர்ந்தான்  சுனதன். மாசறியான்  ஏதோ சொல்ல வர அவரைத் தடுத்து "அவர்கள்  என்னை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள். கடுங்குளிரில் நடுங்குபவனுக்கு சிறு பொறியும் பெரு நெருப்பென்றே தெரியும். மேலும்  இங்கும் நாளும்  மக்கள்  பெருகுகின்றனர். மாவலியருக்கு  இப்பாலையை கடப்பது  வீண் வேலை  என்ற எண்ணம்  இருப்பதாலேயே இவ்விடம்  எஞ்சி இருக்கிறது. மக்கள்  பெருக்கம்  அதிகமாகிறது  என்று  அறிந்தால்  அவர் படைகள் கொடும் பாலையைக் கடந்து எவர்தொடாமேட்டினையும் கைக்கொள்ளும். மக்களிடம் நம்பிக்கை என ஓரிடம் எஞ்சியிருக்க வேண்டும்  தந்தையே. அதற்காகவேனும் இவ்விடம்  இருந்தாக வேண்டும். நான்  புறப்படுகிறேன்" என்றான். செங்குதிரையான நிரத்துவன்  அவனருகில்  வந்தது. மாசறியான்  துணுக்குற்றார். “ மைந்தா! அன்னையிடமும் குடியிடமும் விடைபெற வேண்டாமா?" என்றார்  பதறிய குரலில். அதற்குள்  அவன் நிரத்துவன்  மீது ஏறியிருந்தான். மாசறியானைத் திரும்பி நோக்காது "கனி விழும் தருணத்தை மரம் நிர்ணயிப்பதில்லை தந்தையே" என்றான்.
பின்னர்  ஒரு நீள் மூச்சுடன் "கனியும்  நிர்ணயிப்பதில்லை”  எனச் சொல்லி  அவர் பார்வையிலிருந்து  மறைந்தான்.

No comments:

Post a Comment