Friday, 24 June 2016

பெருஞ்சுழி 7

7
ஆதியில்  இருந்தது  என்ன?  அதுவும்  அறிந்திருக்கவில்லை.  அறியவில்லை  என  அறிந்த  போது  அறிதலாகி வந்த  தன்னை  அது  உணர்ந்தது.  அறிதலுக்கு முந்தைய  கணத்தை மீட்டெடுக்க முயன்று  முயன்று  தோற்றது. அவிழ்த்துக்  கொட்டி தன்னைத்  தேடத்  தொடங்கியது.  யுகங்கள்  கடந்த  அந்தப்  பெருந்தேடலில் புடவியென்றாகி  அதில்  புவியென நின்றது.  அறிக! அறிதலின் வேட்கையில்  எரிகிறது  இப்புடவி. அவ்வனலில் கொதிக்கிறது  இப்புவி. அறிக! புல்லிலும் புனலிலும் சொல்லிலும் அது தேடுவது தன்னைத்தான்.ஆக்கியது  தன்னை  வகுத்துக்  கொண்டது.  ஆக்கியவளென்றும்  ஆக்கியவனென்றும். இருமையிலிருந்து  ஒருமை  நோக்கிச்  செல்ல  நினைத்து  மும்மை உருவாகியது. அதன்  குழந்தைகள் நாம்.  இறை  என நாம்   அழைக்கும்  அதனை  வணங்குவோம். மோதமதி  சுனதனின்  கதை  சொல்லும் முன்  இறைவனை  துதித்துக்  கொண்டாள்.  சுனதன் முதல் வடித்த பாடலென சொல்லப்படும் அதனுள்  அரிமாதரன்  பொருள்  புரியாவிட்டாலும்  விழுந்தான்.  மூன்று  வயதினை நெருங்கிக்  கொண்டிருக்கும் அவனுக்கு  அப்பாடல்  ஆர்வமூட்டுவது  மோதமதிக்கு  வியப்பளித்தது. அவள்  கதையைத்  தொடர்ந்தாள்.  உடை  அணியத்  தொடங்கிய போது  இல்லாதவற்றை உருவாக்கிக்  கொண்டது  மனிதம்.  அன்று  முதல்  பிளவு  உருவாகியது.  பிளவினை உணர்ந்தவர்கள்  சேர்க்கத்  தொடங்கினர். கிடைப்பது  உண்டு  காமுறும் போது  புணர்ந்து  பெருகி இயற்கை  அளிக்கும்  இடர்களிலும்  மூப்பிலும் இறந்து   கொண்டிருந்த  இனத்தின்  நிலையை  இறைவன்  விரும்பவில்லை.  முனைப்பென ஒன்று  பிறந்தது  முதல்  மனத்தில்.  அதிகாரமும்  ஆழ்துயரும் தரும்  அம்முனைப்பினை  கொண்டவர்கள் தங்களை  வீரியம்  மிக்கவர்களென்றும்  அதனால்  தாங்கள்  வீரர்கள்  என்றும்  உணர்ந்தனர்.   முனைப்பினை கண்டு  அஞ்சியவர்களும்  முனைப்பினை  அஞ்சாமல்  அம்முனைப்பிற்குள்ளும் செல்லாமல்  அறிதல்  மட்டுமே  நான்  வேண்டுவது என இருந்தவருமாய் மூன்றெனப் பிரிந்தது மனிதம். அஞ்சியவன் குடியெனவும் அச்சுறுத்தியவன் அரசனென்றும் பிரிந்தனர். சபை என்றும் குடியென்றும் அரசென்றும் தன்னைக் கட்டிக் கொண்டது மனிதம். குடிக்கும் கொற்றவனுக்கும் சமநிலை நிலவ எழுந்தனர் அறிதலில் தன்னை உணர்ந்த அறிதவர்கள். அவர்களின் சொல் நின்றது குடிக்கும் கொற்றவனுக்கும் நடுவில்.

இறுக்கப்பட்ட அனைத்தும் தளர்ந்தாக வேண்டும். தளர்ந்தது அறிதவர்களின் சமன். அறத்தில் நில்லாதொழுகினர் மன்னர். அவர்கள் ஒழுகியதை அறமென வகுத்தனர் அறிதவர். அறிதவர்களில் ஒதுங்கியது ஒரு கூட்டம். துயரவர் என தன்னை வகுத்து நெறிப்படி ஒழுகுதல் மட்டுமே தங்கள் வாழ்வெனக் கொண்டனர். பேருழைப்பின் பலனாய் நிமிர்ந்தெழுந்தது ஒவ்வொரு அரசும். ஒளி கொண்டனர் வலு உள்ளவர்கள். இதுவே என்றென்றைக்குமான நீதி என நிறுத்தினர் அறிதவர். அவர்களை நில்லாது எதிர்த்தனர் துயரவர். மாசறியான் பிறந்தவன்று துயரவர் கூட்டம் தன் பலம் மொத்தமும் இழந்திருந்தது. சமனும் பொதுவும் இனி இல்லை என மாறியது நிலை. தன்னெறி தவறாது வளர்ந்தான் மாசறியான். சுமதனி அவனை விரும்பி மணந்தாள். அவர்களின் முதற்புணர்வு நாளில் அவள் கரம் பற்றிக் கேட்டான் "இக்கீழ்மைகளில் முளைக்க வேண்டுமா என் உதிரம்" என. "இல்லை" என தலையசைத்தாள் சுமதனி. அவர்கள் நடந்தனர். நடை பெருந்தவம் என்றானது. கீழ்மைகள் நெருங்கா ஓரிடம் நோக்கி நடந்தனர்.
அறிதவர்களின் இல்லங்களிலிருந்து பெண்கள் அழுது கொண்டும் உயிரற்றும் வெளியேறிக் கொண்டிருந்தனர். சுமதனியும் மாசறியானும் விழிநீர் வற்றாது நடந்தனர் வடக்கு நோக்கி. வெண்குடி நாடெனும் குறுந்தேசத்தில் மாவலியன் என்றொருவன் தன் தந்தையைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினான் என்பதே அவர்கள் இறுதியாக அறிந்த செய்தியாக இருந்தது. அன்று சுமதனி வாயிலெடுத்தாள். அவள் கரு வளர வளர அவர்கள் வடக்கு நோக்கி நகர்ந்தனர். நிலவில்லா ஓரிரவில் மண் அடைந்தான் சுனதன்.

சுனதனின்  பிறப்பு  நிகழ்ந்தவன்று ஆயிரம்  பேர்  கொடுமைகள்  தாளாமல்  கடல்  புகுந்து  உயிர்விட்டனர் என மாசறியான் அறிந்தார்.  கருமுத்தென கிடந்த தன் மகனின் மீது ஒரு கணம் வெறுப்பெழுவதை உணர்ந்தார். மறுநொடி அவனை அள்ளி அணைத்து அவ்வெறுப்பினை கடந்தார்.சுனதனின்  தகப்பன்  மாசறியான்  மனித  நடமாட்டம்  இல்லாத  ஒரு  மலையுச்சியில்  குடியேறினார்.  சுனதன்  வளர்ந்தான். மனிதக்  கீழ்மைகள்  அவனை  நெருங்கவே  இல்லை.  அவன்  பயணிக்கும்  வாகனமென சிம்மமே இருந்தது.  அச்சம்  என்பதை  அவன்  அறிந்திருக்கவில்லை.  துயரவர்களின் இறுதி நம்பிக்கையான மாசறியான்  நாடு  நீங்கியதும்  அறத்  தயக்கங்கள் முழுமையாக  நீங்கின. தங்கள்  விருப்பத்திற்கேற்ப  விதி  சமைத்தனர் அறிதவர்கள். அறிதவர்களுக்கு எப்பெண்ணையும்  எந்நேரத்திலும்  புணரும் உரிமை  அளிக்கப்பட்டது.  அறிவு  நீட்சிக்கும் இறையை  அடையவும்  ஆயிரம்  ஆயிரம்  பெண்கள்  அறிதவர்  இல்லங்களில்  நிறைந்தனர். எதிர்ப்பு  என்ற உணர்வே  இல்லாமலாக்கப்பட்டனர்.  மாசறியான்  சென்ற  இடம்  நோக்கி  துயரவர்கள்  புறப்பட்டுக் கொண்டே  இருந்தனர்.  அறிதவரையும் மன்னரையும் எதிர்த்து  மக்களை  காக்க  முடியாதவர்களாய் அழுகையும்  ஓலமுமாய் நாடு  நீங்கினர் துயரவர்கள். மாசறியான்  அடைந்த  மலையுச்சி எளிதில்  அடையக்  கூடியதல்ல. கொடும்பாலை கடப்பதற்கு  முன்னரே  பெரும்பாலானவர்கள்  இறந்தனர்.  உயிரின்  கடைசி  துளி  நம்பிக்கை  ஒட்டியிருக்க நூற்றியிருபது  பேர்  மாசறியானின் குடிலில்  எழும்  புகை  கண்டனர்.  பன்னிரு  சிம்மங்கள் அவர்களை  நோக்கி  ஓடி  வந்தன.  இனி  இறைவனே  தங்களை  காக்கட்டும் என அவர்கள்  கண்  மூடியபோது “கார்ர்ர்” என்ற  சத்தத்துடன்  பதிமூன்றாவது சிம்மத்தில் அவர்கள்  முன்  எழுந்தான்  சுனதன். “ இறைவன் பணிந்தவனையும் துணிந்தவனையும் கைவிடுவதில்லை “ என்று  ஒரு  குரல்  கேட்டது.  காரிடி என பதிமூன்று  சிம்மங்களின் குரலும்  உயர  நூற்றியிருபது  பேரின்  குரலும்  இணைய  விரைவு  கொண்டு  வீழ்த்தும்  கருணை  கொண்டு  நோக்கும்  வலுச்சிம்மமென  நின்றிருந்தான் பத்து  வயது  சிறுவன் சுனதன்.

No comments:

Post a Comment