Friday 17 June 2016

உள்ளெழுதல் - சிறுகதை

உயர எறியப்பட்டவளாக  உணர்ந்த மறுகணம் மண்ணில்   இருந்தேன். என்னுடன்  நான் மட்டும். எங்கே  நின்று கொண்டிருக்கிறேன். எதிரே ஏதேதோ  தெரிகிறது. ஏதேதோ  என்றா சொன்னேன். இல்லை  யாவும்  நான்  அறிந்தது தான். யாவும்  என எப்படி  சொல்ல முடியும். எல்லாவற்றின்  வழியாகவும்  என்னையே அறிந்த கொண்டிருந்த  நான் பார்த்தது  எல்லாம் நானே. நாணற்புதரில் நெளிந்த  ஒற்றை நாகத்தை   ஓராயிரம்  எனப்  பெருக்கி  என்னுள் நெளிய  வைத்தது   எது? நான்  அன்றுணர்ந்தது நாகத்தையா? நெளிவென என்னை முறுக்கிப் பிசையும் விசையையா? விழைவையா? இன்று எதிரே  தெரிகிறது  அன்னம். மண்ணில் விழைவது  விடுத்து  மண்ணையே உண்ண வைத்த அப்பருவத்தை அறியாப் பருவமென உதற  முடியுமா? காற்றில்  நீந்தி  நீரில் பிணைந்து  நெருப்பைத்  தீண்டி  வெளியில் விரிந்தெழ நினைத்தது  அறியாமையா?

அன்னம்  ஊட்டி அழ வைத்தனர்  என்னை. என் நீர் வழிந்தது  விழியில்  அனல் கொதித்தது குருதியில்  அலை எழுந்தது மூச்சினில் நின்
அத்தனையும் பார்த்து நின்றதொன்று வெளியில். “ஆம் நீ இன்னொருத்தி  தான்” எனச்  சொல்லி  அங்கமர்த்தினர்  என்னை. உள்ளிருப்பது விரும்பாதவற்றை ஒவ்வொரு நொடியும்  விழைந்தும் விரைந்தும் முடித்தது ஒன்று. ஒன்றை முடிக்கும்  போது  மற்றதில் பற்றி ஏறியது  ஒன்று. விரைவினால் விழைவேறுகிறதா விழைவினால் விரைவேறுகிறதா என்றறியுமுன்னே எல்லாம் கடந்து நகர்ந்து  கொண்டிருந்தது. “அய்யோ  இதுவல்லவேயடி அது இவளல்லவேயடி நீ” என்றென  கூவிக்  கொண்டிருக்கும்  ஒன்றை எங்கோ ஒரு ஆழத்தில்  என கண்டு கொண்டேன். பதறித் துடித்தெழுந்து  பழகிப் போனவற்றில் தொற்றிக்  கொண்டேன். தொற்றத் தொற்றவே உணர்ந்தேன்  என்பிடி தளர்ந்து என்மீது பிடி இறுகுகிறதென.

இன்பம்  இருக்கிறது  இங்கும்  என என்னிடம் என்னிடம்  சொன்னேன். “இங்கா?” என்றாள் ஒருத்தி  ஏளனத்துடன். “இதுவா?” என்றாள் இன்னொருத்தி  இளநகையுடன். “எங்கு?” என எழுந்தோடி வந்து விழி விரித்து தேடிச்  சலித்து  சிரித்தாள்  மற்றொருத்தி. “இங்குமெனில் வேறெங்கடி இருக்கிறது  இன்பம்” என்று அறியாச் சிறுமியரென நகைத்தனர் அனைவரும். கண்மூடி  கண்மூடி  விலகி விலகி நடந்தேன். அறிந்தேன்  மூடிய வழிகளில்  திறக்கிறது  முடிவிலாப் பாதைகளென. மூடிய  விழிகளில்  விரிகிறது முடிவிலியின் முதற்  பிம்பம். இருளாழங்கள் கடந்து வந்து நிற்கிறேனா இவ்விடத்தில். ஏதும் மாறிவிடவில்லை. இங்கு தான்  இருந்து கொண்டிருந்தேனா? இங்கும்  இருந்து கொண்டிருந்தேனா? இல்லை  இங்கு மட்டுமே இருக்க  விழைந்தேன்.

என்ன இடமிது? உண்டு  கொண்டிருக்கிறார்கள். உண்பவர்கள்  யார்?  எங்கோ  நான் கண்டவர்கள்  தான். என் பெயர்  சொல்லி அழைக்கிறார்கள். நான் ஒருவரையும் நோக்கவில்லை என எண்ணும்  போதே ஒவ்வொருவரையும்  நோக்கிக் கொண்டிருக்கிறது  மற்றொன்று. அன்னத்தில் புரண்டழும் குழந்தைகள்  எச்சில்  வடியும் இதழ்கள்  அருவருப்பூட்டும்  பல்லிடுக்குகள் மணம்  கமழும்  இன்நீர் என ஒவ்வொன்றையும்  நோக்கிக்  கொண்டே இருக்கிறேன். இருந்தும்  இல்லாத  ஒன்றை இன்னும் உணர்ந்து கொண்டும் இருக்கிறேன். உணவும்  கள்ளும் அளித்த  போதையில் தடுமாறிப்  பிசைகிறது கூட்டம். யார் விழிகளும்  என்னை  தீண்டவில்லை. எல்லோர் விழிகளிலும்  தன்னைத்  தீண்ட ஒரு தனித்தவன்  நடந்து வருகிறான். எரிபட்ட உலர் சருகென வழியமைத்து நகர்கிறது கூட்டம். எரியினைத் தழுவும்  புனலென அமைகிறது கூட்டம். சிற்றுடல் கொண்டவன். சிறுவன். பாதி மூடிய  ஒரு மென் கரத்தில்  தெரிகிறது உள்ளுதடுட்டின் புண் சிவப்பு. மறு கரம்   உலைகளனில் கொதித்து வார்த்த   இரும்பென இறுகிக் கிடக்கிறது. மண்ணில்  படுகையில் சிவந்து  கண்ணிப் போகிறது  மென் மலர்ப் பாதமொன்று. விரைவடி வைத்து  நிலம்  அதிர நெருங்குகிறது வலுப்பாதம் மற்றொன்று. அன்பு சுரந்து நுரைக்கிறதோர் விழி. அறிவு நிறைந்து  கணக்கிறது மறுவிழி. விழிகள். அவ்விழிகள் குறித்தா சொன்னேன்? எனையன்றி நோக்க  ஏதுமில்லை அவ்விழிகளுக்கு. அவன்  அங்கம் ஒவ்வொன்றாய் என் விழி தொட  விழி எனும் ஓரங்கம் மட்டுமாய் எனைக்  கண்டு எனை நோக்கி வருகிறான்  அவன்.

நானெனும் எண்ணத்தை  அடைந்தது  முதல் எனை நோக்கி வந்து கொண்டே இருப்பவன். கண்டதும் கேட்டதும் உண்டதும் உமிழ்ந்ததும் புணர்ந்ததும் பெற்றதும்  அவனையே  என அறிகிறேன்  இப்போது. இப்போதா? இல்லை இல்லை. அறிந்ததை  அறிவித்துக் கொள்கிறேன்  இப்போது. நெருங்கி  விட்டான். நெருங்குமுன்னே சலித்தும் விட்டான்.

ஏதேதோ  நினைத்திருந்தேன். எளிமையாய் கேட்டுவிட்டான் “ஏன் வந்தாய்?” என.

“என் தலையணிந்த ஆரமொன்றை தொலைத்துவிட்டேன்” என்றேன். உண்மையில்  நான் தான்  சொல்கிறேனா? எவ்வளவு  பொருளற்ற வார்த்தைகள்.

“வா” எனச்  சொல்லி  என் வலக்கை பிடித்தான். சேற்றினை பூசியது போல்  ஒரு அருவருப்பு எழுந்தது  என்னுள். என் கண் முன் தெரிந்த அவன் முதுகை  அப்படியே  மிதித்து கீழே சாய்க்க  எண்ணினேன். அவ்வெண்ணம்  எழும் போதே  என்னுள்  ஊறிய அருவருப்பு இல்லாமலாவதை இப்பக்கம்  என நின்று உணர்ந்தேன். ஓராயிரம்  வார்த்தைகள் பேசியிருப்பேன் அவனுடன். ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. ஒரு நொடியில்  அவன் பிடிக்கும்  என் கரத்திற்கும் இடையே  காற்று நுழைய  நினைப்பதை  உணர்ந்தேன். அவன் தீண்டல் நீங்கினால்  அக்கணமே இறந்தழிவேன் என்ற எண்ணம்  சித்தம் தொடுவதற்குள் பிடியை  விட்டு  “இறந்துவிடமாட்டாய்” என எவ்வுணர்ச்சியும் இல்லாமல்  சொன்னான். என் இறுதிச் சொட்டு ஆற்றலும்  தீர்ந்தழியும் வரை வாஞ்சையுடன் அவனை வதைத்துக் கொல்லும் ஒன்று உடல் தொட்டு எழுந்தது  என்னுள்.

“என் ஆரமெங்கே?” என்றேன்.

பெருங்கதவொன்றின் முன் நின்றிருந்தோம். திறந்தான். ஒளியை மட்டுமே  உணர முடிந்தது உள்ளே. ஆதவன்  ஒருவனை அகச்சிறையிட்டது போல மின்னியது அவ்வறை. நீரலையில்  மூழ்கி  வெளித் தெரியும்  மலர்களென ஒளியில்  பிறந்து தெரிந்தன ஓராயிரம்  தலையணியாரங்கள். ஒவ்வொன்றையும்  எடுத்து  சூடினேன். பொன்னும் முத்தும்  வைரமும் மாணிக்கமும் மரகதமும் வைடூரியமும் என அள்ளி அள்ளிச் சூடினேன். அவற்றில்  புரண்டு ஆடிக் களைத்தேன். ஆடையாய் உடுத்தி அத்தனையும்  கலைந்தெறிந்தேன். பொன் முத்துத் துளிகளென வெற்றுடலில் வியர்வை பரவ  அக்குவியலில் அமிழ்ந்து கிடந்தேன். திடுக்கிட்டு  எழுந்த  போதே தெரிந்தது இவற்றில்  எதையும்  ஆற்றாமல் அவ்வறை வாசலில்  அவனருகே நிற்கிறேன்  என.

“எங்கே  என் ஆரம்?” என்றேன்  எவ்வுணர்ச்சியும் இன்றி.

“அள்ளிச்  சூடுகையில் கண்டு கொள்ளவில்லையா உன் ஆரத்தை நீ?” என்றான்.
சீற்றத்துடன்  திரும்பி  “நீ எப்படி  அறிவாய்?” என்றேன்.

சிரிப்புடன்  நிமிர்ந்து “நான் எப்படி  அறியாமல் இருப்பேன்?” என்றான்.

என் முத்தத்தால் அவன் மூச்சை நிறுத்தி அவனை கொன்று போட வேண்டுமென்ற வெறி எழுந்தது. “சரி  வா” என்றான்.
ஏதோ நினைவெழுந்தவள் என  வந்த வழியை திரும்பிப்  பார்த்தேன். வெகு தூரம்  வந்து விட்டிருந்தோம்.
“திரும்பிச்  செல்லும்  பாதை  மறந்து விட்டது” என்றேன்  அவன் இழப்புக்கு  நகரக்  கூடாதென. அவன் சில அடிகள்  முன் சென்றிருந்தான்.
“இங்கு யாரும்  வந்த வழியில்  திரும்ப முடியாது” என்றான்  என்னை திரும்பி நோக்காமல். “போகாதடி போகாதடி” எனக் கூவிய  அகத்தை அங்கே விட்டுவிட்டு  அவன் பின்னே  ஓடினேன். அரை வட்ட வடிவில் பெரிய  வீடுகள்  எங்களை  சூழ்ந்திருந்தன. மெல்ல  மெல்ல  அவ்வீடுகளில் கனவுத் தன்மை  ஏறி கோயில்களாயின. உள்ளிருப்போர் அனைவரையும்  என் அணுக்கமென  நான்  அறிந்திருந்தேன்.

ஒவ்வொரு  வீட்டிலும்  உள் நுழைந்து தேடினேன்  என் தலையணியை. மணிச்  சத்தம் ஒவ்வொரு  வீட்டிலும்  கேட்டது . என்னைக் காணாதவர்கள்  என அவர்கள்  மாறத் தொடங்கினர்.அலுத்துப்  போய்  அவன்  எதிரில் வந்தமர்ந்தேன்.
“கிடைத்ததா?” என்றான்.
“அது மட்டும்  இல்லை” என்றேன்.
“அவ்வணி தான்  உனக்கு வேண்டுமா?” என்றான்.
திடுக்கிட்டு  அவனைத்  திரும்பி நோக்க  என் கன்னத்தில்  கடுங்குளிரையும் கொடும் வெப்பத்தையும் ஒருங்கே  அளிக்கும்  அவன் சுட்டு விரல் தொட்டு வலப்பக்கம்  திருப்பியது. அகன்று  உயர்ந்திருந்த  கருவறையில் பன்னிரு  தடக்கைகளில் ஆயுதம்  ஏந்தி ஓங்கி நின்றாள்  பெருந்தேவி. அவள் முன் செந்நிற உடையணிந்து  முழுதலங்காரத்தில் நிறைந்து நின்றாள்  ஒரு பேரழகி. இல்லை  அவள்  நான். நான்  அவனருகில்  இருக்கிறேன். அப்பெருந்தேவியின் பாதங்களிலும் நிற்கிறேன்.

அருகில்  ஒருத்தி  அக்கருவறையில் அமைதியாய்  நிற்கிறாள். யாரவள் என் தாயா என எண்ணும் போதே  எந்தையாய் மாறுகிறது அவ்வுரு. நான்  கருவறை உள்ளிருக்கும்  நான் தேவியிடம்  பேசத்  தொடங்குகிறேன். வெளியிலிருக்கும் நான் நான் பேசுவதை கேட்டுக்  கொண்டிருக்கிறேன்.

“சலித்து விட்டேன்” என்றேன்  தேவியிடம் சீற்றத்துடன்.
கல்லென  அவளை எண்ணும்  போதே  அவள் குரல்  செவி நுழைகிறது. அல்லது  அதுவு‌ம் என் குரலா?

“எதனால்  சலித்தாய்?” என்றாள்  தேவி.

தாயாகவும்  தந்தையாகவும்  கணவனாகவும் மாறிக்  கொண்டிருந்த  அவ்வுருவத்தை சில நொடிகள் நோக்கிய  பின் “கொண்டும் கொடுத்தும்” என்றேன்.

“கொண்டதனைத்தையும் கொடுத்துவிட்டாயா?” என்றாள்  தேவி.

“ஆடித்  தீராது  இவ்விளையாட்டு என்றுணர்ந்தேன். நான்  முடிக்க விரும்புகிறேன்.”

“எப்படி?”

“இவர்கள்  அழிவின்  வழி” என மாறிக் கொண்டே இருக்கும்  அவ்வுருவத்தை  கை காட்டினேன். ஒரு நொடி தேவி சிலைத்தாள்.

“பழி சூடுகிறாய் மகளே” என்றாள்.

“அறிவேன்  அன்னையே” என்றேன்.

“ஒரு முறை யோசி” என்றாள்.

ஓரடி பின்னெடுத்தேன். “அய்யோ எத்தகைய  பாவம் சூட இருந்தேன். ஈனறோர் மணந்தோன் என் இருப்பில் மகிழ்ந்தோர் என ஒவ்வொருவரையும்  ஒன்றாய் நிறுத்தி கொல்வதா. எத்துனை  பிழை. வேண்டாம்  வேண்டாம்”  என அகம் அரற்றியது . ஒரு சொல் உதட்டில்  எழவில்லை.

“நான்  முடிவு செய்தாயிற்று” என்றேன்.

பெரு மூச்சுடன்  தேவி தன் படைக்கலன்களில் ஒன்றை எடுத்தாள்.
“சீ கீழ் மகளே. தாழ்த்து உன் படைக்கலத்தை. அவர்கள்  என் கையால்  நீக்கப்படட்டும்” என்றேன்.

தேவி உறைந்தாள். ஒரு எண்ணம் கருக்கொள்ளும்  நேரம்  அனைத்தும்  உறைந்தது. புடவியென்றாகி  நின்றது அறிந்தது  அவ்வுறைதலை. தேவி தலை உலுப்பினாள்.

“வேண்டாம்  மகளே. பழி சூழும்  உன்னை” என்றாள்.

“என் பழியை நான்  சுமக்கிறேன். அகன்று நில்லடி நீ" என்றேன். அவன் புன்னகைத்தான்.
தேவி “ஆகட்டும்”  என பெருமூச்செறிந்தாள்.

அம்மூச்சு இரவென குளிரென அனைத்தையும் சூழ்ந்தது . என் விழி நோக்கவில்லை. தேவியின்  அருகிலோ அவனருகிலோ என்னை நான்  உணரவில்லை. என் உடலாகவும் என்னை உணரவில்லை. நான் என்றொரு எண்ணமாக  நான் ஆற்றவிருக்கும் செயலாக  மட்டும் நான் நின்றிருந்தேன். எடையற்றிருந்தேன்.என்னுள்  எழுந்தது ஓரசைவு. என் காலில்  வெங்குருதியின் சூட்டை  உணர்ந்த போது மீண்டும்  விடிந்தது.
அவன் என்னை நிமிர்ந்து  நோக்கினான். என் ஆரம் அவன் வலக்கையில்  இருந்தது. ஆரத்தை சூடியவாறே எழுந்தமர்ந்தேன்.ஆரத்தை  அவ்வப்போது உணர்வது  மட்டுமே  என் ஆனந்தம் என்றுணர்கிறேன். 

No comments:

Post a Comment