Sunday, 19 June 2016

பெருஞ்சுழி 2


  2
 அவ்விடியலை மோதமதி  அவ்வாறு  கற்பனை  செய்திருக்கவில்லை. இறந்த  போன  ஆதிரையின்  உடலை  தான்  ஏக்கத்தோடு பார்த்திருப்போம் என்றோ அல்லது கசக்கி எறியப்பட்டவளாக ஆதிரை  விடியலில் அரண்மனையின்  குறுவாயில் விட்டு  பித்துப்  பிடித்தவளென வெளியேறுவாள் என்றோ  தான்  நினைத்தாள்.  அக்கணம் தன்னை  ஒன்றும்  செய்ய இயலாத  கருணையின் வடிவென நினைத்துக்  கொண்டிருந்தாள். ஆனால்  இன்று  ஆதிரையின்  மஞ்சமாக்கப்பட்ட  தன் நிலவறையில் உடல் சுருக்கி  தலை  கவிந்து அமர்ந்திருந்தாள்.  கொலைத் தெய்வமென வெறி நடனமாடிய  ஆதிரை  சீர்மூச்சு வெளிவர  துயின்று கொண்டிருந்தாள்.  முதல்நாள்  பின் மதியத்தில்  தான் மோதமதி  ஆதிரையை  முதன் முறைக்  கண்டாள்.  நிறைவயிற்று நாடோடியென தெருவில்  பாடிக்  கொண்டிருந்தவளின் மயக்கும் குரல்  அரசவைச் சென்று  கொண்டிருந்த  பாடல்  குழுவுடன்  அவளை இணைய  வைத்திருந்தது.  அரண்மனை  நுழைந்தது  முதல்  வெருண்ட விழிகளுடன்  குழந்தையென  ஒவ்வொன்றையும்  பயமும்  ஆர்வமும்  கலந்து  பார்த்து  நின்றாள். பாடும்போது அவளுள்  இருந்து  இன்னொருத்தி வெளிவந்தாள்.  மாரதிரன்  அவள்  அழகில்  தூண்டப்பட்டான் என்பது  எவ்வளவு  மடமை  நிறைந்த  எண்ணம்   என நினைத்து  போது  மோதமதியின்  உடல்  சிறுத்தது. அவனை  அவள்  தூண்டினாள் என்பதே  உண்மை.  ஒரு  வார்த்தை  அவள்  யாருடனும்  பேசவில்லை. நகரில்  விடியலில்  நடந்த  தீ வைப்பிற்கு பின் எந்த  குழப்பமும்  இல்லை. மாரதிரனின்  வாரிசுகள் அனைவரும்  மிகுந்த  மரியாதையுடன்  அவரவர்  அறைகளிலேயே சிறை  வைக்கப்பட்டனர்.நிருவரனின்  இழப்பு  அத்தேசத்தை  செயலற்றதாக்கி  இருந்தது.  நிருவரனின்  ஒற்றர்  திறன்  நன்கறிந்ததால்  வாளெடுக்காத அமைச்சனாயினும்  அவன் முதல்  சிந்தனை  சித்தம்  அடைவதற்கு  முன்னே அவனைக்  கொன்றாள். மோதமதி  தன்  இருப்பினை  இல்லாததாக்கிக் கொண்டிருநதாள்.  கணபாரனின்  தலைமையில்  பிரிந்த  படைகள் நகர்  முழுதும்  பரவினர். அரண்மனை நிகழ்வுகள்  ஏற்படுத்தியிருந்த அச்சம்  துடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படைவீரன் கூட  யாரையும் துன்புறுத்தவோ இழிந்துரைக்கவோ  இல்லை.

சவில்ய கோட்டம்  என்றழைக்கப்பட்ட  மாரதிரனால் ஆளப்பட்ட  அப்பகுதி நாற்பது  நாழிகைகளில்  ஆதிரையின்  வசம்  வந்தது.  மகன்  பிறந்து  முதல்  நீராட்டு  முடிந்தவுடன்  தூய  வெள்ளுடை அணிந்து  ஆதிரை துயில் புகுந்தாள்.  நம்பிக்கை  குன்றி  பயமும்  துயரும் கொண்டிருப்பவர்கள் ஓரிடத்தில்  இருந்தாலும்  மறக்கப்பட்டு  விடுவர்.  மோதமதி  ஆதிரையின்  அறையில்  இருந்ததை ஆதிரையின்  சேடிகளோ கணபாரனின்  படை வீரர்களோ நினைவில்  கொண்டிருக்கவில்லை. ஆதிரை மேலும்  ஆழ்ந்த துயிலில் இருப்பதை  கனவில்  சிரிக்கும்  லேசாக  விரிந்த  அவள் மென் குமிழ்  உதடுகள்  காட்டின.  தன்னை  ஒரு பொருட்டெனவே ஆதிரை  கொள்ளவில்லை என மோதமதி  நினைத்தபோது அவள் கையில் ஒரு  குறுவாள் இருந்தது.  ஆதிரையின் பெயரிடப்படாத மைந்தன்  இன்னொரு  அறையில்  செவிலியரிடம் இருந்தான். ஆதிரையை நெருங்க  நெருங்க  அவள் சித்தம்  குழம்பியது.  ஒரே நாளில் சவில்ய  கோட்டத்தை கைப்பற்றிவிட்டனர். யார்  இவர்கள்?  சூரையாடும் முரட்டுக்  கூட்டமாகவும் இவர்கள்  தெரியவில்லை.  அனைத்திற்கும்  மேல் இவள்  யார்?    மாந்தளிர் நிறம் வில்லென உடல்  மயக்கும்  விழிகள் குழந்தையின்  இதழ்கள் . அருளும்  வெறியும்  ஒருங்கே  கொண்டிருக்கிறாள். ஒரு தேசத்தை  மகனைச் சுமந்து கொண்டே  கைப்பற்றிவிட்டாள். அடுத்த நொடி  ஆழ்துயிலில். எப்படி? அனைத்தும்  வெறும் கனவா?  என்ற எண்ணம்  எழுந்த போது  ஆதிரையின்  அருகில் வாளுடன்  நெருங்கியிருந்தாள்.

 ஓங்கி மார்பில் வாளினை பாய்ச்சப் போகும்  அங்குல  இடைவெளியில்  ஆதிரை விழித்தாள். இடக்கழுத்தினை பிடித்து  மோதமதியை கீழே தள்ளினாள்.
சிவந்த  விழிகளுடன்  எழுந்து  அவிழ்ந்த  கூந்தலை  முடிபோட்டுக் கொண்டாள்.
 நிதானமாக  மோதமதியை தூக்கி  தன்னருகே அமரச்  செய்தாள்.
“இது பிழை  அரசியாரே. என் உயிர்  பறிக்க  நினைத்து  அனைவர்  சித்தத்திலும் ஒளிந்தது வரை  சரிதான்.  ஆனால்  வாள்  எடுத்து  எழுந்து நடக்கையில்  சரசரக்கும்  உங்கள்  மேலங்கியை அவிழ்த்திருக்க  வேண்டும. நீண்ட  வாளால்  என் பக்கவாட்டில்  நின்று  கொண்டு  கழுத்து  வழியே  தொண்டைக் குழியில்  வாளினைப்  பாய்ச்சி  இருந்தால்  வலி  குறைவுடன் இறந்திருப்பேன். என்  முகத்துக்கு  நேரே  நீங்கள்  வந்த  போதே என்  நீள்  மூச்சுக்  காற்று  தங்களை உணர்ந்திருக்கும்.” என்று  நிறுத்தினாள். அவள் குரல்  மோதமதிக்கு பயத்தையே வரவழைத்தது.  ஆதிரையின்  குரல்  மாறியது.
“ ஒரு  கணம்  இறந்த கணவனுக்கென இருக்கும் மைந்தர்களை  மறந்தாய். கீழ்மகளே உன்னை ஒரு கணம் அரசியென நீ உணர்ந்திருந்தாலும இச்செயல்  புரிந்து  உன் உயிர் விட எண்ணம்  கொண்டிருக்கமாட்டாய. உன் நலன் காத்துக்கொள்வதற்காக ஒரு பெண்ணின்  உயிருக்கெனவும மாரதிரனுக்கு எதிராக உன் குரல் எழவில்லை. அவன் சங்குடைத்து குருதி குடித்திருந்திருக்க வேண்டும் நீ. உன்னை அறத்தாள் என கற்பனித்துக் கொண்டு வாளாவிருந்தாய்.இன்றும் மனையாள் என்றும் என்னினும் தாழ்ந்தவள் என்ற இழிவினாலும் என் உயிர் பறிக்க நினைத்தாய்.ஒரு நொடி அரசியாய் உன்னை உணர்ந்திருந்தால் உன் மைந்தர்களை என் தாழ் பணிந்து இறைஞ்சி மீட்டு எனக்கெதிராய் வஞ்சம் வளர்த்திருப்பாய். இழிவு பொறுக்க முடியவில்லை அல்லவா  உன்னால். இன்று சொல்கிறேன் என் மகனுக்கு நீதான் செவிலி.  ஒவ்வொரு  நொடியும்  நீ யாரென  அவன்  அறிய  வேண்டும்.  என்னால்  அவனுக்கு  வென்றளிக்கப்பட்ட  பொருள்  நீ.  செல்.  அரிமாதரனை இங்கு தூக்கி வா" என  மோதமதியின்  விழி  நோக்கி  கட்டளையிட்டாள்.
அவள்  வெளியேறியதும்  கணபாரன்  உள் நுழைந்தான். “இதற்கு  அவளை  கொன்றிருக்கலாமே.” என்றான்.
“கணரே அவள்  இறப்பினை விழைந்து விட்டாள்.  விழைந்ததை கொடுப்பது  தண்டனை  அல்ல. அவள்  வாழ்வை  விரும்பும்  போது  அவள்  இறப்பு  நிகழும்” என்றாள்  வழக்கமான  உணர்ச்சியற்ற  குரலுடன்.

2 comments:

  1. வித்தியாசமான தண்டனை!

    ReplyDelete
  2. வித்தியாசமான தண்டனை!

    ReplyDelete