Saturday 25 June 2016

பெருஞ்சுழி 8

8
அன்பு கொண்டொழுகுதலன்றி சுனதன்  வேறேதும் அறிந்திருக்கவில்லை. குலம்  காக்க  வந்த  தெய்வமென  அவனை வணங்கியது மலை நோக்கி  தினம்  தினம்  வந்த  துயரவர்  கூட்டம்.  முதலில்  நிரை வகுத்து அவ்விடம்  அடைந்த  நூற்றியிருபது பேரும்  மக்களை மலை நோக்கி  கொண்டு  வந்தனர். சமவெளி  மட்டுமே  கண்டிருந்த  மக்கள்  அம்மலை வாழ்வை  விரும்பவில்லை.  தங்கள்  தலைவனென மதித்த  மாசறியானும் தெய்வமெனத் தொழுத சுனதனும் இருக்கையில்  அவ்விடம்  நீங்கவும்  அவர்கள்  விரும்பவில்லை.  பேசும்  மொழியன்றி அவன்  எந்த  நூலும்  கற்கவில்லை.  இயற்கை  அள்ளி  விரித்தது  அவன் முன் அறிதலின்  பெரும்பாதையை.
அவன்  கால்கள்  அனிச்சையாய்  அறிந்தன அக்காட்டினை. தொடக்கத்தில்  அவன்  செய்கை  கண்டு  பயந்தாள்  அவன் தாய் சுமதனி . ஆனால்  கருநாகக் குஞ்சுகளை  தாய்  நாகத்திடம்  அவன்  நழுவவிட்ட  போது  தன் மகன்  இனி  தன்னவன் கிடையாது  என தனக்குள்  அழுது  கொண்டாள்.  அவனை  தாய்  மறந்தாள். தகப்பன்  துறந்தான். துயரவர்  நினைவிலும்  அவன்  இல்லாமலாகிக் கொண்டிருந்தான். காமம்  கொண்டவன்  கொள்பவளின் அசைவுகளின் நுண்ணிய  அர்த்தம்  அறிவது  போல்  சுனதன்  அக்காட்டினை  அறிந்தான். மனிதன்  அக்காட்டினுள் உருவாக்கிய சமன்  குலைவினை மாசறியானும் அவனைப்  போல்  இயற்கை  நூல்  கற்ற  பிறரும்  அறிந்தனர்.  ஆனால்  சுனதன்  அந்த  சமன்  குலைவினைத் தாண்டி  உருவாகும்  சமநிலை  கண்டான்.  கருணையின்  கண்ணுருத் தோற்றமாய் அவன்  முன் நின்றது  அக்கானகம். காதல்  கொண்டவனின் கண்விழி நோக்குடனே அக்காட்டினை  அவன்  பார்த்தான். காற்றாய்  அவனை  அள்ளித்  தழுவினாள். நீராய்  அவனை அடித்துத் துவைத்தாள். நெருப்பாய் நெருங்கிச் சுட்டாள். நிலமாய்  அவனை  அணைத்து  உறங்கினாள். வான்  விரிவாய் முடிவற்ற  வெளியில்  அவனை  இழுத்துச்  சுழற்றினாள்.  அனைவரும் அன்னையென  வணங்கிய  இயற்கையை சுனதன்  கொதித்து நெருங்கும்  குமரியெனக் கண்டான். இயற்கையென அவள்  அளித்த  அகக்  கிளர்ச்சி  எப்பெண் முகமும்  அவனுக்கு  அளிக்கவில்லை.  அவளுடன்  விளையாடி  அவளை  உண்டு  அவளுள்  உறங்கி  அவளை  உடுத்தி  அவளுள்  ஒன்றாகி  அவளையும்  தன்னுள்  ஒன்றாக்கி  வளர்ந்தான். இயற்கையோடு மகிழ்ந்திருக்கையில் நெடுமரங்களின் உச்சிக்  கிளை வளைத்து  மறு மரம்  தாண்டுவான். கோபம்  கொள்கையில் குளிர்  பாறையென கொட்டும்  பேரருவியில்  கூர்ந்து  நிற்கும்  பெருங்கற்களில் கை நுழைத்து  மேலேறுவான்.கடுந்தேனின் இனிப்பும்  கொடு நஞ்சின்  கசப்பும்  சுனதன்  ஒன்றென உணர்ந்தபோது  அவனுக்கு  முடிவின்மை நோக்கிய  முதல்வினா மனதில்  எழுந்தது.
ஐம்புலன்களில் இயற்கையின்  ஐந்து  வல்லமைகளையும் உணர்ந்தவன்  அவ்வியற்கையை விலக்கி  அமர நினைத்தான்.  பசுங்குளிர் பரப்பென கண் முன்  கிடந்த  கானகம்  துறக்க  கண்  மூடினான். மூடிய  விழியினுள்ளும்  துரத்தின காட்சிகள்.  வென்றான். களிற்றின் பிளிறலில் இருந்து  மலரும்  மொட்டின் ஓசை  வரை  அவன்  செவிகள் தன்  செயல்  அவித்தன. மலரின்  மணம்  முதல்  ஒளி  பட்டு  மாறும்  நீரின்  மணம் வரை  அவன்  நாசி  கடந்தது.  நுகர்வு  உண்டாக்கும்  நுண்ணிய  சுவையையும்  நா  தவிர்த்தது. குளிரையும்  வெயிலையும்  நீரையும்  மறந்தது  தோல்.  அணைக்கும் இயற்கை  முன்  தன்  ஒவ்வொரு  மயிர்காலும்  நடனமிடுவதை  சுனதன்  உணர்ந்தான். உடலெனும் சிறை  கடந்து  சிந்தை  விரிந்தது.  இயங்குவிதி அவனுக்குப் புரிந்தது.  விரிந்த  களத்தில்  நடக்கும்  பெரு விளையாட்டில்  தானொரு சிறு  கருவியென உணர்ந்தான். விழி திறந்தான்  சுனதன்.  முதுகில்  பரவிக்  கிடந்த  நீள்  முடியை  அலையடிக்கச் செய்தாள் வளிமங்கை. ஒவ்வொரு  உடல்  தசையும்  முழுமையில் நிகர்நிலையில்  நிலைத்திருக்க  நீர்க்கன்னி இடுப்பை  சுற்றியிருந்த  ஆடை  நனைத்திருக்க வலுவான  அடிகள்  வைத்து  ஏழு வருடங்கள்  கழிந்தபின் உள் காடு  விடுத்து  தன் மக்கள்  நோக்கி  வந்தான்  சுனதன்.  அவன் களம்  காத்திருந்தது.
நிலம்  முழுதும்  நிகழ்ந்தவை கூறினர் பாணர்களும் விறலியரும். அவர்கள் சொல்லில் புகுந்தான்  சுனதன். இரக்கமும் கருணையும்  இயல்பெனக் கொண்டவன் வதைபடும்  ஒவ்வொரு  உயிருக்கெனவும் கண்ணீர்  விடுபவன்  தன்னுள்  முனைப்பின் முளை எழுவதை உணர்ந்தான். புணர்வும் பொருள்  சேர்ப்பும்  வாழ்வெனக்  கொண்டவர்கள் பெருகியிருப்பதை அடங்கிய அவன் உள்ளம்  உணர்ந்தது.  அத்தனை ஒளியையும்  தன்னுள்  அழுத்தும்  மாலையென நிலத்தில்  நடக்கும்  அனைத்திற்கும்  நடுவென நின்றிருந்தான்  ஒருவன். "மாவலியர்" என்று  அவன்  பெயர் சொன்னதும்  சொல்லுதிர்த்த பாணனின் சிரம் சிலிர்த்தது. விழிகள்  மின்னின. வலியென அவன் சொற்களில்  நடித்தது உலகை இயக்கும் அப்பெருங்கிளர்ச்சி. அக்கிளர்ச்சி உடல் பின்னும்  நாகமென  மனம்  இறுக்கும்  காமமென தினம் நடிக்கும்  வீரமென தன்னுள்  பற்றி ஏறுவதை சுனதன்  உணர்ந்தான். செல்வம்  கொடுக்கும்  சிறப்பனைத்தும்   பெற்று  பெரும்  வலுவும்  கூர்மதியும்  கொண்டு  இன்பமும்  வெற்றியும்  மட்டுமே  வாழ்வெனக்  கொண்டவன்  மாவலியன். சுனதனின்  தன் நிகர் வல்லவனின்  சிறப்புகளை  கேட்கத்  தொடங்கினான்.  கொடுமைகளே  உருவான  அவன்  குருதி  குடித்த  வரலாறு  அன்பே  உருவான  சுனதனை கிளர்ச்சி  கொள்ளச் செய்தது.  நிகர்  கொண்டே பிறக்கின்றன அனைத்து  பெருஞ்செயல்களும் என்பது  எவ்வளவு  உண்மையென சுனதன்  வியந்தான்.

No comments:

Post a Comment