Saturday 16 July 2016

இலக்கியச் செயல்பாடுகள்

போரும் வாழ்வும் நாவலில் இப்படி ஒரு காட்சி. இளவரசர் ஆண்ட்ரூ ரஷ்யாவின் உயர்குடியில் பிறந்த ஒரு திறன் வாய்ந்த இளைஞர். எதிரியே எனினும் நெப்போலியனின் வீரம் குறித்தும் புத்திசாலித்தனம் குறித்தும் மதிப்பு கொண்டவர். அவரை போல ஆகும் எண்ணம் கொண்டவர் என்று கூட சொல்லி விட முடியும். போரிடும் ஒரு தருணத்தில் ஆண்ட்ரூ காயம்பட நேர்கிறது. மரணத்தை நெருங்கிவிட்டதாக எண்ணுகிறார். கைகளை விரித்து மண் மீது கிடக்கையில் வானத்தைப் பார்க்கிறார். வெண்மேகங்கள் அமைதியுடன் தவழ்ந்து செல்கின்றன. அக்காட்சியின் முன் அதுவரை அவர் மனதில் பேருருவம் பெற்று நின்ற நெப்போலியன் அவரை குனிந்து நோக்குகிறார். அக்கணம் நெப்போலியன் குறித்த ஆண்ட்ரூவின்  பிம்பம் உடைகிறது.

இந்த தருணத்தை குறித்து என் நண்பர் பிரபுவிடம் " மனிதன் இயற்கை நோக்கி திரும்ப விரும்பும் கணம் அது. அதனாலேயே அவனுக்கு நெப்போலியனை விட வெண் மேகங்கள் உயர்ந்தவையாகத் தோன்றுகின்றன " என்று என் பார்வையை முன் வைத்தேன். அவர் "சக்ரவர்த்தி கூட என்னை பொருட்படுத்தி குனிந்து நோக்குகிறான். அந்த மேகங்கள் என்னை நின்று பார்க்கக் கூட இல்லை. நிச்சயம் மண்ணில் நிகழ்ந்த சக்ரவர்த்திகள் அனைவரை விடவும் அந்த வெண் மேகம் உயர்ந்தது என எண்ணுவதால் அவன் நெப்போலியனை சிறுமையுடன் உணர்கிறான் " என்றார். என்னுள் ஒரு திறப்பு நிகழ்ந்ததை உணர்ந்தேன். சந்தேகம் இல்லாமல் இந்த உரையாடலை ஒரு இலக்கியச் செயல்பாடாக என்னால் முன் வைக்க முடியும். இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவே. நான் புரிந்து கொண்டவாறு இலக்கியத்தை விளக்கிக் கொள்ள முயல்கிறேன்.

இலக்கியப் படைப்பு ஒன்றை ஒருவரை வாசிக்கச் சொல்லி கொடுக்கும் போது ஒன்று " புரியவில்லை " அல்லது " போரடிக்குது " எனச் சொல்லி என்னிடம் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு நூலினை அணுகும் முறையில் இருக்கும் புரிதல் பிழையே நூலினை " புரியாததாகவும் "  "போரடிப்பதாகவும் " மாற்றுகிறது. நூல் வாசித்தலையும் அதனை விவாதித்தலையும் பொழுது போக்காக கொண்டவர்கள் நம்மில் மிகக் குறைவே. வாசிப்பு  என்ற தனிப்பட்ட  செயல்பாட்டினை பிற பொழுது போக்குகளுடன் குழப்பிக் கொள்வதால் பெரும்பாலும்  ஒரு நூல் வாசிப்பிலிருந்து "தகவல்களை","கருத்துகளை" நாம் எதிர்பார்க்கிறோம். அது நேரடியாக  சொல்லப்படாமல் நாம் அறிந்திராத  ஒரு வாழ்க்கை  சூழலில்  இருந்தும்  விறுவிறுப்பான கதை சொல்லலின் வழியாகவும்  கிடைக்க வேண்டும்  என எதிர்பார்க்கிறோம். ஆனால்  இலக்கியம்  குறிப்பாக  நாவல் எனும்  வடிவம் முழு வாழ்க்கையையும்  சொல்லிவிட முயல்வது. நாவலின்  வடிவங்கள்  விவாதித்து புரிந்து கொள்ள வேண்டியவை.

உதாரணமாக ஒரு மனிதன்  பிறந்து வளர்ந்து வாழ்வில் பல பிரச்சினைகளை சந்தித்து இறப்பது வரையிலான ஒரு வாழ்க்கை சித்திரத்தை ஒரு படைப்பு அளிக்க முயல்கிறது எனக் கொள்வோம். அதை அப்படியே நேராக கதாநாயகனின் குணநலன்கள் கதாப்பாத்திரங்களின் குண நலன்கள் என விவரித்து " மற்றவர்களால் " அவனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என நகர்த்திச் சென்று அவன் இறப்பதில் கொண்டு போய் கதையை முடிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். இதையே ஒரு சிறிய  வடிவ மாற்றத்தை ஏற்படுத்தி படைப்பின் முதல்  அத்தியாயத்தில் ஒருவன் எல்லா  நம்பிக்கைகளையும் இழந்து தோற்று நாற்பது வயதில்  உயிர்விடுகிறான். அடுத்த அத்தியாயத்தில் அவன் நாற்பது வருடங்களுக்கு முன் பிறக்கும் போது அவன் தாய் கொள்ளும் உணர்வுகள் தந்தையின் மனதில் முளைக்கும் கனவுகள் உறவினர்கள் அக்குழந்தை மீது நிகழ்த்தும் உரையாடல்கள் என நகர்வதாகக் கொண்டால் அப்படைப்பு  ஒவ்வொரு மனதிலும் உருவாக்கும் அகச் சலனங்கள் முடிவற்றது. ஏனெனில் அந்த பிறப்பு கணத்தின் கண்ணீரும் மகிழ்ச்சியும் நம்பிக்கைகளும் தகர்ந்து அவன் இறந்து விட்டதை ஏற்கனவே கண்டு விட்ட நம் மனம் அந்த பிறப்பை எவ்வாறு எதிர் கொள்ளும்? என்ற கேள்வி எழுகிறது.  இக்கேள்வியின் ஊடாக வாசகனையும் தன்னுள்  அழைக்கிறது அப்படைப்பு.

பொழுதுபோக்குக்காக படிக்கப்படுபவைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள முக்கிய  வேறுபாடு  வாசகன்  உள் நுழைய வேண்டிய  இந்த இடைவெளியே. முன்பு சொன்ன உதாரணத்தில்  இறப்புக்கும் பிறப்புக்குமான ஒரு பெரும் இடைவெளியை அப்படைப்பு உருவாக்கி விடுகிறது.  இந்த உதாரணம் கூட லியோ டால்ஸ்டாயின்  கிரேய்ஸர் சொனாட்டா என்ற  குறு நாவலில் இருந்து பெறப்பட்டது  என்று  நினைக்கிறேன்.  ஓடும்  ரயிலில்  மனைவியைக் கொன்ற  ஒருவன்  தன் வாழ்வை சக பயணி ஒருவருடன்  பகிர்ந்து  கொள்வதாக கதைத்  தொடங்கும். அவன் மனைவியைக் கொன்றது முதலிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. அதன் பிறகு  வாசிக்க என்ன இருக்கிறது  என ஒரு சராசரி  வாசகன்  அப்படைப்பை தூக்கி எறிந்து விட முடியும். அதற்கான  வாய்ப்புகளே அதிகம். அதே நேரம் தண்டனை  பெற்று திரும்பி வந்திருக்கும்  அந்த கதை சொல்லியிடம் கதை கேட்பவராக நம்மை இணைத்துக்  கொள்ளும் போது டால்ஸ்டாய்  என்ற படைப்பாளியின்  முழுமையான  சிந்தனை வீரியத்தை கண்டு விட முடியும். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல்  குறுங்கதை என எவ்வகையான  இலக்கிய  வடிவமாயினும் அது பொதுவாக இந்த இடைவெளியை கொண்டிருக்கும்.

அனைத்திற்கும்  முன்னதாக  இன்னொரு கேள்வி எழும். எளிமையான  "புரிந்து" கொள்ளக் கூடிய  "நட்சத்திர" எழுத்தாளர்களின் "பெஸ்ட்செல்லர்" புத்தகங்கள்  இருக்கையில்  பொழுது போக்குக்காக வாசிப்பை விட மிகச் சிறந்த வாய்ப்புகள்  இருக்கும்  இந்த காலத்தில்  நான் ஏன் ஒரு புரியாத புத்தகத்தை அல்லது  இலக்கியப் பிரதியை அது உருவாக்கும்  இடைவெளிகளுக்குள் புகுந்து  வாசிக்க வேண்டும்?  அதனால்  நேரம்  கடப்பதை தவிர என்ன கிடைத்துவிடப் போகிறது?  நேரடியாக  இருந்தாலும்  இது நியாயமான  கேள்வியே. இதற்கான  பதிலும் எளிமையானதே. ஆதிகாலம் முதல் மனிதன்  அடிப்படையில்  அறிதலில் ஆர்வம்  உடையவனாகவே இருக்கிறான். வாழ்வதற்கான  அடிப்படைகளை உருவாக்கிக் கொண்ட பின்பு அறிதல்  நோக்கியே நம் மனம்  நகர்கிறது. ரேடியோ தொலைக்காட்சி அலைபேசி என தகவல் தொடர்பு ஊடகங்கள் வெகு விரைவாகப் பரவியதற்கு  காரணம்  நம் அறிதலின்  மீதான  வேட்கையே. இலக்கியம் உருவாவதற்கு  முந்தைய கால கட்டத்திலேயே உலகம்  முழுக்க கதைப்பாடகர்கள் கூத்துக் கலைஞர்கள்  இருந்திருக்கிறார்கள். மகாபாரதம்  சூதர்கள் என்றும்  தமிழ் இலக்கியங்கள் பாணர்கள்  என்றும்  அழைக்கும்  இவர்களின் தொழிலே மன்னர்  குலக்கதைகளை ஊர் ஊராகப் பாடுவதும் பரப்புவதும் தான். இன்று கூட பொதுவுடமைக் கட்சிகள்  தெரு முனை பிரச்சாரங்களோடு அடித்தட்டு மக்களை சந்திப்பதற்கு தெரு முனை  நாடகங்களை நடத்துவதை காண முடியும். இவை அனைத்தும்  நம்மிடம் சொல்வது ஒன்றையே. உணவும்  காமமும்  கடந்து நம் அனைவருக்குள்ளும்  எழும் இயல்பான  இச்சை என்பது அறிதலே. அனைத்தையும்  அறிந்து விடத் துடிக்கும்  நம் மனதின் முன் பிரம்மாண்டமாய் விரிந்து கிடக்கிறது பிரபஞ்சம். இந்த பெருந் தொகுப்பினை அறிய நம்முடைய  அத்தனை அறிதல்களையும் ஒன்று திரட்ட வேண்டும். தனி மனித  வாழ்க்கை பெருந்திரள் வரலாறு உயிர்த்தொகைகளின் இயக்கம் வானியல் சார்பியல் மூளை நரம்பியல் அணுக்கருவியல் மொழியியல் என எல்லா தளங்களிலும் நம் அறிவு விரிந்து பரவிய வண்ணமே உள்ளது. இவ்வகை அறிதல்களை தொகுத்து நம்மிடம்  அளிக்க கல்வி நிறுவனங்கள் நம்மிடம்  உள்ளன. ஆனால்  எவ்வகை நிறுவனமாயினும் தன் வசதிக்கு ஏற்றவாறு அது அனைத்தையும்  ஒற்றைப்படையாக  விளக்கவே முயலும். அத்தகைய  நிறுவனங்களில்  பயின்ற நம்முடைய  சிந்தனையும் ஒற்றைப்படையாகவே இருக்கும். கருப்பு- வெள்ளை  சரி-தவறு என சிந்திக்கவே பழக்கப்பட்டிருப்போம். ஆனால் ஒரு  வரலாற்றுப்  புத்தகத்தில் பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில்   இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கானவர்கள்  இறந்தனர்  என்பதை வெறும் தகவலாக  மட்டுமே  கடந்து வர ஒரு தார்மீக மனதினால்  முடியாது. அது கோபப்படும் கண்ணீர்  விடும் கேள்வி கேட்கும். இலக்கியத்தின் நோக்குமும் அதுவே. நம் அறிதலை சமரசமற்றதாக்குவது. அடிப்படை  மானுட  அறத்தை தக்க வைக்க முயல்வது.

நாவல் (novelty) என்ற வார்த்தையின் அர்த்தம்  புதுமை. வாழ்க்கைக்கு  நிகரான  ஒரு அனுபவத்தை  சித்தரித்துக் காட்டவே இலக்கியம்  என்றும்  முயலும். இலக்கியத்தில்  இது பெருநாவல்களின் காலகட்டம். பத்தாண்டுகளுக்கு  முன்பு  நிறைய  தகவல்  தெரிந்தவரே நிறைய எழுதி விட முடியும். வெற்றியடைய முடியும். ஆனால்  இன்று  இணையத்தின்  பரவலாக்கத்திற்கு பிறகு தகவல்களை பெறுவது எளிமையாகிவிட்டது. சமூகம்  முழுவதும்  விரவிக் கிடக்கும்  தகவல்களை தொகுத்து தன் உள்ளுணர்வால் அவற்றின் உணர்வு நிலைகளை அறிந்து வாசகன்  முன் வைப்பதே ஒரு எழுத்தாளனின் திறன். புதிதாக  உருவாகி வருவதாலும் முதன் முறையாக  முன் வைக்கப்படுவதாலும் இலக்கியப் படைப்பு பெரும்பான்மையை ஈர்க்காது. புதியதை முயல்வதற்கான தைரியம்  உடையவர்களே இலக்கியப்  படைப்பின்  வாசகர்களாக இருக்க இயலும். ஆனால்  இலக்கியத்தில்  உருவாக்கப்படும்  வடிவங்கள்  பொழுது போக்கு படைப்புகளின் வழியாக இரண்டாம்  நிலை வாசகர்களை வேறு விதமாக  சென்றடையும். உதாரணமாக  போரும்  வாழ்வும்  நாவலில்  நெப்போலியன்  படையெடுப்பு வழியாக  கொந்தளித்து அடங்கும்  வாழ்வின் சித்திரத்தை உருவாக்கியிருப்பார் லியோ டால்ஸ்டாய். ஆனால்  அந்நாவலில்  ஒரு ஆர்வமூட்டக்கூடிய வரலாற்று நாயகனைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கும். அந்த கவர்ச்சியை மட்டும்  மையமாகக் கொண்டு  தமிழர்களின் உணர்வுகளை  மையப்படுத்தி  கல்கி சாண்டில்யன் நா.பார்த்தசாரதி அகிலன் போன்றவர்கள் நிறையவே எழுதி இருக்கின்றனர். பொன்னியின் செல்வன் அவ்வகையில்  தமிழில்  பரவலாக வாசிக்கப்படும்  ஒரு நீள்கதை. இவ்வகை ஆக்கங்களில் டால்ஸ்டாயில் வெளிப்படும்  அறம் நோக்கிய  தேடல் வெளிப்படாவிட்டாலும் நல்லவன் கெட்டவன் போன்ற  ஒரு எளிமையான  சித்திரங்களை  உருவாக்கி கெட்டவன் அழிக்கப்பட வேண்டும்  என்ற வகையில்  ஒரு எளிமையான  ஒழுக்க நெறியை முன் வைக்க முடியும்.  ராஜராஜ சோழனை நாயகனாகக் கொண்ட  பொன்னியின்  செல்வன் அக்கால  சோழர் வரலாற்றை பிரதிபலிப்பதில் குறைவுடையதெனினும் மானுடர்களுக்கு இருக்க வேண்டிய  குணங்களாகிய அன்பு கருணை வீரம் சுயநலமின்மை  போன்றவற்றை முன்னிறுத்துவதால் ஒரு ஆரம்ப நிலை வாசகனுக்கு உவப்பானதாக இருக்கும். ஆனால்  அங்கேயே நின்று விடக்கூடாது  என்பதே ஒரு இலக்கிய  வாசகனுக்கான எச்சரிக்கை.

முன்பே சொன்னது போல இலக்கியப் படைப்புகள்  புதுமையை நோக்கி நகர்பவை. மரபை மறு கட்டுமானம்  செய்தாலும் அவற்றில்  ஒரு கறாரான  புறவயத்தன்மை இன்றைய இலக்கியப் படைப்புகளில் இருக்கும். உதாரணமாக  சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்  அறுநூறு  ஆண்டு கால மதுரை வரலாற்றை  கள்ளர்களின் வழியாக  விரித்தெடுக்கும் படைப்பு. ஆனால்  அது நுட்பமாக ஒரு வாழ்க்கையையும் சொல்லிவிட  முயலும். இன்றைய மனநிலையில்  அன்றைய வரலாற்றை மறு ஆக்கம்  செய்யும். ஜெயமோகனின்  வெண்முரசு மகாபாரத்தை மறு ஆக்கம்  செய்யும்  முயற்சி. பத்து நாவல்கள்  இதுவரை வெண்முரசில் எழுதி முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு  நாவலுக்குள்ளாகவும் பல குறு நாவல்களை கண்டெடுக்க முடியும். வெண்முரசு  நாவல் வரிசையை  வாசிப்பவர்கள் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே ஒரு பெரும்  கலையனுபவத்தை அடைய முடியும். வெண்முரசு வாழ்வு குறித்த எல்லா வகையான  உணர்வு நிலைகளையும்  மகாபாரத பாத்திரங்களின் வழியாக  விரித்தெடுக்கும்.  மகாபாரதத்தில்  சில வரிகளில்  சொல்லப்பட்ட பாத்திரங்கள்  வெண்முரசில்  விரித்துச் சொல்லப்பட்டிருக்கும். அவர்களின் நியாயங்களும் கண்டடைதல்களும் அக மோதல்களும் விவரிக்கப்பட்டிருக்கும். இப்படி  தினம் தினம்  புதுமையையும் உண்மையையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்  இலக்கியப் படைப்புகளில்  எழுத்தாளன் மட்டுமல்ல வாசகனும் இன்றியமையாதவன். முன்பே சொன்னது  போல  இலக்கியப் படைப்புகள் வாசகனின் பங்களிப்பை கோருபவை. ஆகவே படைப்பினை உருவாக்குவது மட்டுமல்ல படைப்பு  குறித்து  விவாதிப்பது விமர்சிப்பது அப்படைப்பு  நம்முள்  உருவாக்கும்  உளநிலைகளை பகிர்வது என அனைத்துமே இலக்கியச் செயல்பாடு தான்.

டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களை மிக முக்கிய படைப்பாளியாக முன்னிறுத்துவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இருந்ததில்லை. அடுத்த கேள்வி அவர் யார் என்ன செய்தார் என்பதாகவே இருக்கும். போரும் வாழ்வும் பெருநாவலினை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்தார் என்று நான்  சொன்னால் "அவரா சொந்தமா எதுவும்  எழுதலியா" என்றே பலர் கேட்பார்கள். தமிழில்  போரும்  வாழ்வும்  வாசித்தவர்கள் அக்கேள்வியை கேட்க மாட்டார்கள்  என நினைக்கிறேன். உருவாக்கம் அளவிற்கே  மொழிபெயர்ப்பும் இலக்கியத்தில்  முக்கிய  பணியே. நம்மில்  சிலர் "கம்பர் என்னப்பா பண்ணிட்டார். வால்மீகி எழுதினத திரும்ப எழுதினார்" என்கிற  ரீதியில்  பேசுவார்கள். அவர்களுக்கும் சேர்த்தே ஒன்று சொல்ல  வேண்டும். வாசக நுழைவிற்கான இடைவெளிகள் நிறைய இருந்ததாலேயே மகாபாரதம்  மூவாயிரம்  வருடங்கள்  கடந்து இன்றும்  மறு வாசிப்பினை மறு ஆக்கங்களை கோருகிறது. சிலப்பதிகாரமும் திருக்குறளும் சங்க இலக்கியங்களும் இன்றும்  விவாதிக்கப்படுவதற்கு காரணம் அவை என்றென்றைக்குமான மானுட அறங்களை வலியுறுத்துவதாலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டதாலும் தான். எனவே ஒரு சிறந்த  நூலினை நண்பருக்கு  பரிந்துரைப்பது முதல்  இத்தகைய  கட்டுரை எழுதுவது  வரை அனைத்தும்  இலக்கியச் செயல்பாடே.  கம்ப ராமாயணத்தின் சில வரிகளை படித்தாலே அப்படி  கேட்பவர்களுக்கு  புரிந்துவிடும்  படைப்பில் "சொந்தமாக எழுதுவது" என ஏதும்  கிடையாதென.

புதிய சிந்தனைகளும் கோணங்களும் முதலில்  முளைப்பது இலக்கியத்தினூடாகவே. பெண்ணியம் தலித்தியம் சூழலியல்  என சமூக  மேம்பாட்டுக்கான அனைத்து கருத்துவருவங்களையும் இலக்கியம்  முதலில்  அறிமுகப்படுத்துகிறது அல்லது  சமூகத்தில்  ஒரு குரல்  ஒலிப்பதற்கான தேவை இருக்கும்  போது முதல் ஆளாகச் சென்று இலக்கியம்  தன் மைக்கை நீட்டுகிறது. அந்தக் குரலின் வழியாக  எக்காலத்துக்குமான  மானுட அறங்களை வகுத்து விடத் துடிக்கிறது. தோற்கிறது. முற்றாக  புறக்கணிக்கப்படுகிறது. மறு கண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. பாரதியும் புதுமைபித்தனும் அப்படி  புறக்கணிக்கப்பட்டு மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டவர்களே. புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதற்கு  அவ்விரு பெரும்  படைப்பாளிகளின் அந்திம காலமே சான்று.

ஒரு கூர் தீட்டப்பட்ட  அறவுணர்வுடைய சமூகமாக முன் செல்ல நம் இலக்கியங்களை  நாம் வாசித்தாக வேண்டும். எப்போதும்  மானுடத்தின்  கனவென்பது இன்னும்  மேம்பட்ட சமூகமே. அத்தகைய  மேன்மைகளுக்கான விதைகள்  அடைக்கப்பட்ட மூட்டை  இலக்கியம்.

1 comment:

  1. இக்கட்டுரையைப் படித்ததும் எனக்கொரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. நானும் படிக்கணும். நான் படித்ததை அடுத்தவரையும் வாசிக்கத் தூண்டனும். இது சாதாரணமானதுதான். ஆனால் அதற்கு பிறகு அதோடு நில்லாமல் அவரை வலுக்கட்டாயமேனும் வாசித்ததைப் பற்றி விவாதத்துக்கு அழைக்கணும் எனத் தோன்றியதுதான் ஏன் என விளங்கவில்லை. ஒருவேளை இந்த இலக்கிய விவாதங்கள் நடைபெறுகின்றனவே...அவையெல்லாம் இந்த இலக்கிய செயல்பாடுகள்தானோ? ஆனால் நான் இப்படியும் நினைக்கிறேன்...இந்த விவாதங்களில் வரும் முடிவுகளிலோ அல்லது மற்றவர் சொல்லும் கருத்துகளிலோ கூட நம் மனம் முரண்படுவது உண்டு. ஒரு இலக்கியப் படைப்பானது ஒரு தனிமனிதனுக்கானது என்றே நான் நினைக்கிறேன். அது அவனைத் தனிப்பட்டவிதத்தில் பாதிப்பதை எந்த விவாதத்திலும் வெளிப்படுத்த இயலாது. மேம்போக்காக சமூகத்தில் அரசியலில் வரலாற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை வேண்டுமானால் விவாதித்து நம் பேச்சுத்திறனையும் அறிவுத்திறனையும் சபையில் நிலைநிறுத்திக் கொள்ளலாம். ஆனால் தார்மீக அடிப்படையை நம் ஆழ்மனத்தை தாக்கும் ஒரு இலக்கியப் படைப்பை விவாதத்திற்குள்ளும் விமர்சனத்திற்குள்ளும் நிச்சயமாக கொண்டுவரமுடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த தாக்கமானது அந்த பாதிக்கப்பட்ட மனிதனின் செயல்பாடுகளில் மட்டுமே காணப்படும். அதுதான் உண்மையான இலக்கிய செயல்பாடாக இருக்க முடியும். என் நோக்கில் என் சிறு கருத்திது. அவ்வளவுதான்.

    ReplyDelete